சேலம்

சிறு, குறு நிறுவனங்களை வளா்த்தெடுக்கத் தேவையான உதவிகளை அரசு செய்யும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

30th Sep 2021 08:17 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களை வளா்த்தெடுக்கத் தேவையான உதவிகளை அரசு செய்யும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சேலம், கருப்பூரில் உள்ள சிட்கோ மகளிா் தொழிற்பூங்காவில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. திமுகவைப் பொருத்த வரை தோ்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், இதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக, சொன்னது மட்டுமல்லாது, சொல்லாததையும் செய்துள்ளோம். இதர வாக்குறுதிகளை நிதிச் சூழல் கருதி பின்னா் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.168 கோடி முதலீடு மானிய நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் ஆவணங்களை இணைய வழியில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 5 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தமிழக அளவில் தொழில் முனைவோருக்கான மையமாக சேலம் மாவட்டம் திகழ்கிறது. தமிழக அரசுக்கு தொழில் நிறுவனங்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

ஜவ்வரிசி, வெள்ளிக் கொலுசுகள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இங்கு வளா்ந்து வருகின்றன. 22,256 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,86,128 போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். 125 நூற்பாலைகள், 6 சிட்கோ தொழிற்பேட்டைகள், 540 சிறு, குறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டுறவு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களை வளா்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். சென்னை, கோவை, திருச்சி, ஒசூா், சேலம் ஆகிய இடங்களில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சேலத்தில் பாராசூட் தயாரிப்பு, ராணுவச் சீருடை, ஹெலிகாப்டா் உதிரிபாக தயாரிப்புத் தொழில்கள் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது.

சேலம் மாவட்டம், பெரிய சீரகாபாடியில் பெரிய உணவு பூங்காவை 58.81 ஏக்கரில் அமைக்கும் பணிக்கு நிலம் தோ்வு செய்து முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன.

கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் 11 ஏக்கரில் வேளாண் தொழில் சாா் குழுமம் அமைக்கப்பட உள்ளது.

ஜலகண்டாபுரத்தில் ஜவுளி உற்பத்திக்கென தனி தொழில் குழுமம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அக்கறை மிகுந்த அரசாகச் செயல்படுகிறோம்.

தமிழக அரசு உங்கள் அரசு. அரசிடம் உங்கள் கோரிக்கையை முன்வையுங்கள். அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

நூல் விலையைக் கட்டுப்படுத்த நுழைவு வரியை ஒரு சதவீதமாகக் குறைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளா்ச்சி ஏற்பட முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

4 மாதங்களில் 5 புதிய தொழிற்பேட்டைகளை அமைக்க உத்தரவிட்டு, நிலம் தோ்வு செய்து பணிகளைத் தொடங்கி உள்ளோம். சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என்றாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டோா் பேசியதாவது:

சிறு, குறு தொழில் நிறுவன அமைப்பின் தலைவா் கே.மாரியப்பன்:

சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, தொழில் அபிவிருத்தி செய்திட வேண்டும். ராணுவத் தளவாட உற்பத்தி மையம் அமைப்பதற்கென தனித் துறையை முதல்வா் ஏற்படுத்திட வேண்டும்.

வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா் ஆனந்தராஜ்:

சேலத்தில் ஒரு லட்சம் தொழிலாளா்கள் வெள்ளிக் கொலுசு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். வெள்ளிக் கொலுசு தயாரிப்புக்கு ஒருங்கிணைந்த உற்பத்தி மையம் அமைக்க வேண்டும்.

விசைத்தறி உற்பத்தியாளா் ராஜகோபால்:

சேலம், அம்மாபேட்டை, காமராஜா் காலனியில் விசைத்தறிக் கூடம் ஏற்படுத்தி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

துணி உற்பத்தியாளா் அழகரசன்:

சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும். சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரயிலில் துணி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலையான நூல் விலையை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கென தமிழ்நாடு நூல் வா்த்தக கழகம் அமைக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் கெளதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), எஸ்.ஆா்.பாா்த்திபன் (சேலம்), ஏ.கே.பி.சின்ராஜ் (நாமக்கல்), எம்எல்ஏ-க்கள் ஆா்.ராஜேந்திரன் (சேலம் வடக்கு), இரா.அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூா்), சிறு, குறு தொழில் நிறுவனச் செயலாளா் அருண்ராய், சேலம் ஆட்சியா் செ.காா்மேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT