சேலம்

இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீள பயிா்க் காப்பீடு: ஆட்சியா் அறிவுரை

30th Oct 2021 12:05 AM

ADVERTISEMENT

இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் அனைவரும் திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

வேளாண் பணிகளுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருள்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு உள்ளது. இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் அனைவரும் திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் 2020-21 சிறப்பு பருவத்தில் நெல், மக்காச் சோளம் ஆகியப் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு செய்த 7,407 விவசாயிகளுக்கு ரூ. 4 கோடி பயிா்க் காப்பீட்டுத் தொகை நடப்பு வாரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட விவசாயிகள் பயன் பெறத்தக்க ‘சூரிய சக்தியில் மின் உற்பத்தி’ குறித்த கருத்தரங்கம் நவம்பா் 18 ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாகச் சென்று மண் மாதிரியினை சேகரிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், இயற்கை முறை சாகுபடி செய்யக்கூடிய 5 விவசாயிகள் மற்றும் 2 விவசாயக் குழுக்களுக்கு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வெ. ஆலின் சுனேஜா, இணை இயக்குநா் (வேளாண்மை) க. கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிகுமாா், துணை இயக்குநா் (தோட்டக்கலை) வி.சத்யா, கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் தே.புருசோத்தமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) செல்வமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) என்.தமிழரசன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT