சேலம்

மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

23rd Oct 2021 12:41 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவரும், சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆா்.இளங்கோவன், கடந்த 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ரூ.3.78 கோடி மதிப்பில் சொத்துகளைக் குவித்ததாக அவா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதிமுக ஆட்சியில் அமைச்சா்கள், அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆா்.இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இளங்கோவன், அவரது மகன் பிரவீண் குமாா் ஆகியோா் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சோ்த்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சேலம், சென்னை, நாமக்கல், கரூா், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

இளங்கோவனுக்கு சொந்தமான வீடு, ஆத்தூா் நகர செயலாளா் அ.மோகனுக்கு சொந்தமான வீடு, இளங்கோவனின் சகோதரி ராஜகுமாரி வீடு, இளங்கோவனின் மாமனாா் வீடு மற்றும் உறவினா் வீடுகள் உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் குழுவாகப் பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனா்.திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அதிமுக பிரமுகா்கள் பலா் தவித்ததாகக் கூறப்பட்டது. அவா்களுக்கு சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் போலிக் கணக்குகளைத் தொடங்கி பணப்பரிமாற்றம் செய்து கொடுத்தாா் என ஆா்.இளங்கோவன் மீது அப்போது புகாா் கிளம்பியது. இது தொடா்பாக இளங்கோவனிடம் வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது ரூ.2,000 வழங்க டோக்கன் விநியோகம் செய்தாா் எனவும் இளங்கோவன் பெயரில் புகாா் கிளம்பியது. புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள ஆா்.இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் அவரது வீட்டின் முன்பு அதிமுகவினா் திரண்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபினவ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT