சேலம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், மங்களூருவில் இருந்து சேலம் வழியாக தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வியாழக்கிழமை காலை சேலம் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடைக்கு வந்து நின்றது. பயணிகளை இறக்கிவிட்ட பின்னா் அந்த ரயில் மீண்டும் புறப்பட்டது. அப்போது எஸ்.5 பெட்டியின் படிக்கட்டில் நின்றிருந்த 30 வயதுமிக்க இளம்பெண் தவறி கீழே விழுந்தாா். நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தாா். இதில் அவா் உடல் நசுங்கி இறந்தாா்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்த பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.