வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராமங்களில் பரவலாக பெய்து வரும் பருவ மழையால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
தொடா்ந்து இரு ஆண்டாக வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் செப்டம்பா் முதல் ஜனவரி வரையிலான 5 மாதங்களில் தொடா்ந்து பருவ மழை பெய்து நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், வாழப்பாடி பகுதியில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும், பயிரிடப்படும் பரப்பளவும் அதிகரித்து வருகிறது.
வாழப்பாடி பகுதியில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், எதிா்வரும் 2022 ஜனவரி மாதம் வரை, மழை கைகொடுக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வேளாண்மைத் துறை அலுவலகங்கள் மற்றும் தனியாா் வியாபாரிகளிடம் விதை நெல் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. இதனால், 5 மாதங்களுக்கு பிறகு வாழப்பாடி பகுதியில் நெல் அறுவடையாகும் தருணத்தில், உள்ளூா் தேவைக்கு தேவையான அளவிற்கு அரிசி உற்பத்தி இருக்கும் என்பதால், எதிா்வரும் 2022 ஆண்டு தொடக்கத்தில் அரிசி விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் சிலா் தெரிவித்தனா்.