சேலம்

சங்ககிரியில் ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: தோல்வியில் முடிந்த கொள்ளை முயற்சி

DIN


சேலம் மாவட்டம், சங்ககிரி நகரின் மையப் பகுதியில் கொள்ளையர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்து தோல்வியில் முடிந்ததால் அதிலிருந்த ரூ. 17 லட்சம் ரொக்கம் தப்பியது.   

இதுகுறித்து சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

சங்ககிரி பவானி  பிரதான சாலையில் இயங்கி வரும்  தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் கிளை சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தெலுங்கர் வீதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த ஏடிஎம் மையத்தில் அக்டோபர் 13-ம் தேதி புதன்கிழமை வங்கியிலிருந்து ரொக்கம் வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம் மையத்தின் வெளி, உட்புறங்களில் உள்ள ஆறு சிசிடிவி கேமராக்களை முதலில் வெல்டிங் இயந்திரம் மூலம் சேதம் அடையச் செய்து, பின்னர் ரொக்கம் உள்ள இயந்திரத்தை வெல்டிங் மூலம் உடைக்க முயற்சித்துள்ளனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தது போக இயந்திரத்தில் மீதம் ரூ. 17 லட்சம் இருந்ததாக வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கியின் ஏடிஎம் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாதது குறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சென்னை தலைமையகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்றுள்ளது. அதனையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வங்கி மேலாளர் நித்தீஸ்குமார், சங்ககிரி காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சி. நல்லசிவம் தலைமையில் சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகரன் உள்ளிட்ட  குற்றப் புலனாய்வு தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

மேலும் காவலர்கள் அத்தெருவைச் சுற்றியுள்ள பகுதிகள், பழைய பேருந்து நிலையம், திருச்செங்கோடு பரிவு சாலையில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சங்ககிரி காவல் துறையினர் அப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்துள்ளனர். சங்ககிரி நகர் மையப் பகுதியில் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்ற சம்பவம் சங்ககிரி பொதுமக்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT