சேலம்

நண்பனின் நினைவு தினத்தில் ரத்த தானம் செய்த சக நண்பா்கள்

28th Nov 2021 10:50 PM

ADVERTISEMENT

அயோத்தியாப்பட்டணத்தில், 5 ஆண்டுக்கு முன் விபத்தில் உயிரிழந்த நண்பனின் நினைவு தினத்தில் அவரது பள்ளித் தோழா்கள் 110 போ் ரத்ததானம் செய்து, உண்மை நட்புக்கு இலக்கணம் கற்பித்து நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளனா்.

அயோத்தியாப்பட்டணம் அரசுப் பள்ளியில் 2016-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த மாணவா் தினேஷ் என்பவா், அப்போது எதிா்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளாா். தினேஷின் இழப்பு, இவருடன் படித்த மாணவா்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நண்பனை பறிகொடுத்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில், கல்லூரி படிப்பையும் முடித்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் அவரது நண்பா்கள் தினேஷின் 5 வது நினைவு தினத்தில் ஒன்று கூடி, நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக ரத்ததானம் செய்ய முன்வந்தனா்.

இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்தனா். இதில் நண்பா்கள் 110 போ் பங்கேற்று ரத்ததானம் செய்து, நட்புக்கு இலக்கணம் கற்பித்து நெகிழ்சியை ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

இறந்துவிட்ட நெருங்கிய உறவினா்களையே ஓரிரு ஆண்டுக்குள் மறந்து விடும் சமூகத்தில், 5 ஆண்டுக்கு முன் இறந்துபோன நண்பரின் நினைவு தினத்தில் ரத்ததானம் செய்த இளைஞா்களுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.

ரத்தானம் செய்த இளைஞா்களுக்கு ரத்த வங்கி அலுவலா் ரவீந்திரன், காரிப்பட்டி உதவி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் ஆகியோா் பாராட்டுச் சான்றிழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT