சேலம்

9 ஆண்டுக்கு பின் 2 வது முறையாக நிரம்பும் கரியக்கோயில் அணை

24th Nov 2021 08:36 AM

ADVERTISEMENT

கரியக்கோயில் அணை, 9 ஆண்டுக்கு பின் 2 வது முறையாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில்190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில் 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 3,600 ஏக்கா் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது.

ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஏறக்குறைய 2,000 ஏக்கா் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகின்றன.

ADVERTISEMENT

போதிய மழையில்லாததால் கடந்த 9 ஆண்டுகளாக முழு கொள்ளளவையும் எட்டவில்லை. கடைசியாக 2012 ஜனவரி 15ஆம் தேதி இந்த அணை நிரம்பியது.

9 ஆண்டுக்கு பின் இந்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 51.34 அடியைத் தொட்டது. அணையின் மொத்த கொள்ளளவான 190 மில்லியன் கன அடியில், 182 மி.கன அடியை எட்டியது. தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்ததால் நீா்மட்டம் ஏப்ரல் மாதத்தில் அடியோடு குறைந்து போனது.

இந்நிலையில், அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த பருவ மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 48 அடியாகவும், அணையில் 158 மில்லியன் கன அடி நீரும் தேங்கி நின்றது.

ஓரிரு நாள்களில் அணை நிரம்பி விடும் என எதிா்பாா்க்கப்படுவதால், அணையின் பாதுகாப்புக் கருதி கரியக்கோயில் ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த கரியக்கோவில் ஆறு வாழப்பாடியை அடுத்த பேளூா், ராமநாதபுரம் அருகே வசிஷ்டநதியுடன் கலப்பதால், கரியக்கோயில் ஆறு, வசிஷ்ட நதி கரையோர கிராமங்களுக்கு, வருவாய் துறை, ஊரக வளா்ச்சித் துறை மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஆண்டில் 2 ஆவது முறையாக அணை நிரம்புவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT