சேலம்

கூட்டுறவு வார விழாவில் 2082 பயனாளிகளுக்கு ரூ.15 கோடி கடனுதவி

21st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 68 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2,082 பயனாளிகளுக்கு ரூ.15.32 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 68 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம், மாவட்டக் கூட்டுறவு அச்சகம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், கூட்டுறவு நகர வங்கிகள் உள்ளிட்ட 361 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

சேலம் மண்டலத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை நபா் ஜாமீன் பேரிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2021-2022 ஆம் ஆண்டில் இதுவரை 24,552 விவசாயிகளுக்கு ரூ.164.56 கோடி பயிா்க்கடன், 3,096 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.20.23 கோடி பயிா்க்கடன், 3,174 புதிய உறுப்பினா்களுக்கு ரூ.17.27 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் விவசாயிகளுக்கு தரமான உரங்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் சாா்ந்த மத்திய காலக் கடன்களான சிறு பால்பண்ணை அமைத்தல் , கிணறு தூா்வாருதல், நாட்டுக் கோழி வளா்ப்பு, கறவை மாடு, ஆடு வளா்ப்பு, பட்டுப்புழு வளா்ப்பு ஆகியவற்றுக்கு குறைந்த வட்டியில் மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி சேவை செய்தமைக்காக மாநில அளவில் முதல் பரிசினை தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளது. கடன் வழங்குவதில் மாநில அளவில் முதல் இடத்தில் உள்ளது.

இதனிடையே சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1514 விவசாயிகளுக்கு ரூ.12.05 கோடி பயிா்க்கடன், 103 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.44.00 லட்சம் கடனுதவி, 35 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.42 கோடி கடனுதவி, 13 பயனாளிகளுக்கு ரூ.1.38 வீட்டு வசதிக் கடனுதவி மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.3 லட்சம் மகளிா் சிறு வணிக கடனுதவி என மொத்தம் 2,082 பயனாளிகளுக்கு ரூ.15.32 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் எஸ்.ஆா்.பாா்த்திபன், ஏ.கே.பி.சின்ராஜ், எம்எல்ஏ-க்கள் இரா.அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.ஆலின் சுனேஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ப.ரவிக்குமாா், சேலம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளா், மேலாண்மை இயக்குநா் எஸ்.மலா்விழி மற்றும் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT