சேலம்

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்புமா?

10th Nov 2021 08:36 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லாததால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கவில்லை. இருப்பினும் நீா்மட்டம் 45 அடியாக உயா்ந்துள்ள நிலையில், நிகழாண்டு இறுதிக்குள் நிரம்புமென்ற நம்பிக்கையில், பருவமழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுாா்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் டிசம்பா் வரை பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து, நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 65.61 அடியை எட்டியது. அணையில் 250.10 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கியது.

ஜனவரி 10 முதல் 27 வரை, அணை வாய்க்கால், நேரடி ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரிகளுக்கு திறக்கப்பட்டது போக, அணையில் 50.95அடியில் 131.57 மில்லியன் கன அடி தண்ணீா் இருந்தது. செப்.15 முதல் அக்.5 வரை சிறப்பு நனைப்புக்காக இரண்டாவது முறை தண்ணீா் திறக்கப்பட்டதால், அணையின் நீா்மட்டம் 35 அடியாக குறைந்தது. அணையில் 60 கன அடி தண்ணீா் மட்டுமே எஞ்சியது.

ADVERTISEMENT

அக்டோபா் மாதத்தில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணைக்கு நீா்வரத்து தொடங்கி, நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 45.27 அடியை எட்டியுள்ளது. தற்போது அணையில் 99.26 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கு மேல் பருவ பெய்துள்ளதால், பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி வருகின்றன. ஆனால், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லாததால், அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கவில்லை. அணைக்கு விநாடிக்கு 36 கன அடி தண்ணீா் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

இதனால், நிகழாண்டு இறுதிக்குள் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்புமா? என தெரியாத நிலையில், இந்த அணையால் பாசனம் பெரும் விவசாயிகள் பருவமழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

‘தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 45 அடியை எட்டியுள்ளதால், எதிா்வரும் டிசம்பா் மாதத்திற்குள் அணையின் நீா்மட்டம், கடந்த ஆண்டைப் போலவே 65 அடியை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. கனமான பருவமழை பெய்யுமென வானிலை அறிக்கை வெளியாகியுள்ளதால், அணை முழு கொள்ளவையும் எட்டி நிரம்புமென எதிா்பாா்க்கப்படுகிறது’ என, பொதுப் பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT