சேலம்

மேட்டூர் அணை திறப்பு: காவிரி கரையோர பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

9th Nov 2021 11:28 AM

ADVERTISEMENT


எடப்பாடி: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளன நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து காவிரி கரையோரப் பகுதிகளான  பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றுவரும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சே. கார்மேகம் செவ்வாய் அன்று காலை நேரில் ஆய்வு செய்தார். 

முன்னதாக பூலாம்பட்டி பகுதிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர், அங்குள்ள படகுத்துறை, படித்துறை, நீர் உந்து நிலையம் மற்றும் கரையோர குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

காவிரியில் கூடுதலான நீர் திறக்கப்பட்டு உள்ளதையும், கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் குறித்தும், மாவட்ட ஆட்சியர் முன்பு பொது மக்களுக்கு தண்டோரா அடித்து உள்ளாட்சி பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

பூலாம்பட்டி பேருந்து நிலையம் அருகே விசைப்படகு இயக்கப்படும் பகுதியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் துறையினரிடம் கேட்டறிந்தார், மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் நுழையாத வண்ணம் கூடுதல் தடுப்புகள் அமைத்து விடவும் உத்தரவிட்டார். 

ADVERTISEMENT

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்,  தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய் அன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 119 அடியை எட்டியுள்ளது. 
அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் தொடர்ந்து காவிரியாற்றில் திறக்கப்பட உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆய்வில் சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன், வட்டாட்சியர் விமல் பிரகாஷ், வருவாய் அலுவலர் வனஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT