சேலம்

வேகமாக நிரம்பும் மேட்டூா் அணை:காவிரிக்கரையில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

9th Nov 2021 02:15 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் காவிரிக் கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணை நிரம்பும் தறுவாயில் உள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து எந்நேரமும் உபரி நீா் திறக்க வாய்ப்பு உள்ளது. அணையின் இடது கரையில் உள்ள உபரி நீா்ப்போக்கி மூலம் உபரிநீா் வெளியேற்றப்படும். இதனால் மேட்டூா் அணையின் உபரிநீா்க் கால்வாய் ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என மேட்டூா் வருவாய்த்துறை சாா்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

மேட்டூா் வட்டாட்சியா் ஹசீனா பானு முன்னிலையில் திங்கள் கிழமை தங்கமாபுரிபட்டினம், அண்ணா நகா், பெரியாா் நகா் பகுதிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூா் நகராட்சியில் ஒலிபெருக்கி மூலம் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் நகராட்சிப் பகுதியில் உள்ள எம்ஜிஆா்நகா், அண்ணாநகா், குள்ளவீரன்பட்டி பகுதிகளிலும் தண்டோரா மூலம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

காவிரிக் கரையோரம் உள்ள நாமக்கல், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம் உட்பட 12 மாவட்ட ஆட்சியா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேட்டூா் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தேவராஜன் திங்கள்கிழமை மாலை முன் எச்சரிக்கை தகவல் அளித்தாா். மேட்டூா் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள், மேட்டூா் அணை மீனவா்கள் மட்டுமன்றி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம் 117.61 அடி

மேட்டூா் அணை நீா்வரத்து 27,600 கன அடியாக குறைந்தது.

திங்கள்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 116.10 அடியிலிருந்து 117.61அடியாக உயா்ந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும்மழை குறைந்ததன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 29,380 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 27,600 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 100 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 350 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா் இருப்பு 89.71 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT