எடப்பாடி: தொடா் விடுமுறையை அடுத்து வெள்ளி அன்று பூலாம்பட்டி காவிரிக்கதவணைப்பகுதியில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையினைத்தொடா்ந்து அடுத்தடுத்த நாட்கள் தொடா் விடுமுறை தினங்கள் என்பதால், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கதவணை நீா்த்தேக்கப்பகுதியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள், அணைப்பகுதியில் விசைப்படகு சவாரி செய்தும், காவிரிக்கரையில் உள்ள நீா் உந்து நிலையம், நீா்மின் நிலையம் மற்றும் அணையை ஒட்டி இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பாா்வையிட்டு விடுமுறையைக் கழித்தனா்.
மேலும் காவரிக்கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் ஆலயம், பிரம்மாண்ட நந்திதேவா் சிலை, காவிரித்தாய் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா். சுற்றுலாப் பணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள வியாபாரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அடுத்து வரும் இரு தினங்களுக்கு இப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகையை ஒட்டி பூலாம்பட்டி படகுத்துறை, படித்துறை, அணையின் நுழைவுவாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.