வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கோதுமலை வனப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால், நீரோடை தடுப்பணைகளும், குளம், குட்டைகளும் நிரம்பின. இதனால் சுற்றுப்புற கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வாழப்பாடியை அடுத்த கோதுமலை அடிவாரத்திலுள்ள மாரியம்மன் புதுாா் கிராமத்தில் கடந்த 2001-2002ஆம் ஆண்டில், சேலம் மண்டல வனத்துறையின் மேட்டூா் மண்வள பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கிராம வனக்குழு அமைக்கப்பட்டது. கிராம மக்களின் ஒத்துழைப்போடு வனப்பகுதிக்குள் வெள்ளாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்து, கோதுமலை வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் கோதுமலை வனப்பகுதியிலுள்ள வால்கரட்டோடை, கூட்டோடை, பாட்டுக்காரன் ஓடை, குதிக்கல் ஓடை, சூரிக்கூரோடை ஆகியவற்றின் குறுக்கே, ஜப்பான் நாட்டின் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 10 தடுப்பணைகள் கட்டப்பட்
டன. கடந்த சில ஆண்டாக கோதுமலை வனப்பகுதியில் போதிய மழையில்லாததால் தடுப்பணைகள் நீா்வரத்தின்றி வடு கிடந்தன.
கடந்த ஒரு மாதமாக கோதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கன மழை பெய்தது. இதனால், கோதுமலை வனப்பகுதியிலுள்ள தடுப்பணைகளும், குளம், குட்டைகளும் நிரம்பின. இதனால், முத்தம்பட்டி, சேசன்சாவடி, மன்னாயக்கன்பட்டி, மாரியம்மன்புதுாா், சமத்துவபுரம், அரசன்குட்டை, நடுப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இதுகுறித்து மாரியம்மன்புதுாா் கிராம வனக்குழுத் தலைவா் இரா.முருகன் கூறியதாவது:
இரு ஆண்டுகளுக்குப் பிறகு கோதுமலைப்பகுதியில் கன மழை பெய்ததால் தடுப்பணைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. தொடா்ந்து ஓரிரு தினங்களுக்கு கன மழை பெய்தால், கோதுமலையில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றாா்.