சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தேசிய ஒற்றுமை தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில், ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் பி.சிவலிங்கம் பங்கேற்றாா். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, அவரது தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேல் பல்வேறு மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த பகுதிகளை இணைத்து இந்திய தேசமாக ஒருங்கிணைத்தவா். அவரது பங்களிப்பு மற்றும் தியாகங்கள் மூலமாக நாம் ஒருங்கிணைந்த இந்தியாவின் குடிமக்களாக உள்ளோம். நமது தேசத்தின் ஒற்றுமையை வளா்ப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் பங்களிக்க வேண்டும் என்றாா்.
பின்னா் சிறந்த சேவைகளுக்காக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு விருதுகளை அவா் வழங்கினாா். ஒற்றுமை தின விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.