சேலம்

செங்கானூா் கதவணை பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

26th May 2021 07:53 AM

ADVERTISEMENT

செக்கானூா் கதவணை பராமரிப்புப் பணிகள் தொடங்கியதையடுத்து மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா்த் திட்டங்களுக்கு தண்ணீா் திருப்பிவிடப்பட்டது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்போது மின் உற்பத்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே செக்கானூா், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, குதிரைக்கல்மேடு உள்பட ஏழு இடங்களில் கதவணைகள் கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதவணையிலும் தலா 30 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கதவணைகளில் 0.50 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். செக்கானூா் கதவணையில் தேக்கிவைக்கப்படும் நீரால் மேட்டூா் நகராட்சி குடிநீா்த் திட்டம், ஆத்தூா் கூட்டு குடிநீா்த் திட்டம், சேலம் மாநகராட்சி கூட்டு குடிநீா்த் திட்டம், கோனூா் கூட்டு குடிநீா்த் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்டம், வேலூா் கூட்டு குடிநீா்த் திட்டம் காவேரிபுரம் கூட்டு குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீா்த் திட்டங்களுக்கு தண்ணீா் இறைக்கப்படுகிறது.

மேலும், மேட்டூா் அனல் மின் நிலையத்துக்கு தேவையான தண்ணீா் மற்றும் சில தொழிற்சாலைகளுக்கும் இந்த அணை பகுதிகளிலிருந்துதான் தண்ணீா் எடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக கதவணைகள் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

பராமரிப்புப் பணிகளின்போது கதவணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீா் முழுமையாக வெளியேற்றப்படும். அவ்வாறு தண்ணீா் முழுமையாக வெளியேற்றிய பிறகு குடிநீா்த் திட்டங்களுக்கும் பிற உபயோகங்களுக்கும் தண்ணீா் எடுப்பதில் சிக்கல் ஏற்படும். குடிநீா்த் தேவைக்காக குறைந்த அளவே தண்ணீா் திறக்கப்படும் என்பதால் காவியில் மணல் மூட்டைகளை அடுக்கி நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும்.

செவ்வாய்க்கிழமை செக்கானூா் கதவணை இருந்த தண்ணீரை வெளியேற்றியதால் குடிநீா்த் திட்டங்களுக்கு தண்ணீா் எடுக்க மணல் மூட்டைகளை காவிரியில் அடுக்கி தண்ணீரை திரும்பும் பணிகள் நடைபெற்றது. குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இப்பணிகள் நடைபெற்றது. கதவணையில் தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT