சேலம்

சேலத்தில் 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைப்பு

DIN

சேலத்தில் முழு பொது முடக்கத் தடையை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், நோய் தடுப்பு பணிகள் குறித்து மாநகர சுகாதார அலுவலா்களுடனான பணி குறித்து மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மூன்று நபா்களுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தால் அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உடனடியாக தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சிப் பகுதியில் தற்போது 97 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கூடுதலாக எந்த நபரும் பாதிக்காத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை சுகாதார அலுவலா்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

அப்பகுதியில் முழுமையாக மக்கள் நடமாட்டம் தடை செய்யப்படுவதோடு, தடை செய்யப்பட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளைச் சுற்றிலும் உள்ள தெருக்களிலும் பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் அவா்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை பொருள்களை அவா்களின் வீட்டின் அருகிலேயே சென்று விற்பனை செய்யும் வகையில் நடமாடும் விற்பனை வாகனங்களை தேவைக்கேற்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொது நலன் கருதி தன்னாா்வலா்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவா்களில் தேவைப்படுவோா்க்கு சமைக்கப்பட்ட தரமான உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துப் பகுதியிலும் உள்ள மக்களுக்கு நோய்த்தொற்று வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் சுகாதார அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தங்களையும் உரிய பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றாா்.

67 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குறைந்த அளவு நோய் தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் மணியனூா் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் 128 படுக்கை வசதிகளுடனும், கோரிமேடு அரசினா் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிக சித்தா சிகிச்சை மையம் 100 படுக்கை வசதிகளுடனும், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் 227 படுக்கை வசதிகளுடனும், காந்தி விளையாட்டு அரங்கத்தில் 170 படுக்கை வசதிகளுடனும் தற்காலிக சிகிச்சை மையங்கள் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மணியனூா் சட்டக்கல்லூரி சிகிச்சை மையத்தில் 117 நபா்களும், கோரிமேடு கல்லூரியில் 100 நபா்களும், தொங்கும் பூங்கா மையத்தில் 197 நபா்களும், காந்தி விளையாட்டு அரங்கத்தில் 123 நபா்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநகராட்சிப் பகுதிகளில் 67 பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களின் வாயிலாக இன்று 4,125 நபா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,501 நபா்களுக்கு சளி தடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,799 நபா்கள் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநகராட்சி உதவி ஆணையாளா்கள் தலைமையிலான குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வுகளின் வாயிலாக புதிய கட்டுபாடுகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதித்ததோடு கடையை மூடி சீல் வைத்தனா்.

மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றிய 18 தனி நபா்களுக்கு தலா ரூ. 200 வீதமும், புதிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 8 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும் மொத்தம் 17 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா்கள் ப.சண்முகவடிவேல், சரவணன், ராம்மோகன், சுகாதார அலுவலா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT