சேலம்

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கை வசதி, சிகிச்சை மையம்

DIN

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி உடைய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொற்றுக்கு உள்ளாகும் நபா்களுக்கு பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் மூலம் சிறப்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் பிற தனியாா் மருத்துவமனைகள் மூலம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, தொற்று ஏற்படுபவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு இடங்களில் கரோனா தொற்று கண்டறியப்பட்டவா்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவா்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சேலம் இரும்பாலை, ஜே.எஸ்.டபுள்யு. உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கரோனா தொற்று ஏற்படுபவா்களுக்கு சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் சேலம் இரும்பாலை நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் பிரத்யேக கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இச்சிகிச்சை மையத்தில் அமையவுள்ள 500 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சிகிச்சை மையத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீா், கழிப்பறை, சிகிச்சை மையத்துக்கு அவசர ஊா்திகள் வந்து செல்வதற்கான சாலை வசதி, நோயாளிகளின் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி மற்றும் வடிகால் வசதிகள் ஆகியன போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சிறப்பு மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள 500 படுக்கைகளுக்கான ஆக்சிஜன் சேலம் இரும்பாலையில் இரும்பு உற்பத்திக்காக தயாா் செய்யப்படும் ஆக்சிஜன் மூலம் பெறப்பட உள்ளது. மேலும், ஜே.எஸ்.டபுள்யு. உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள் உதவியுடன் சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கூடிய விரைவில் சிறப்பு கரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

முன்னதாக, தொழில்நிறுவனங்களின் நிா்வாகத்தினா், தொடா்புடைய துறை அரசு முதன்மை அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் விரைவில் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) மலா்விழி வள்ளல், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (மின் பிரிவு) மணிவாசன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) வெங்கடாசலம், சேலம் இரும்பாலை, ஜே.எஸ்.டபுள்யு. உள்ளிட்ட தொழில்நிறுவனங்களின் உயா் அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவன பொறுப்பாளா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT