சேலம்

பொதுமுடக்கம்: சேலத்தில் சாலைகள் வெறிச்சோடின

DIN

சேலம்: கரோனா பரவல் முழு பொதுமுடக்கத்தை முன்னிட்டு சேலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், திங்கள்கிழமை முதல் மே 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, சின்னக்கடை வீதி பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

சேலத்தில் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஓடவில்லை. சின்னக்கடை வீதி மற்றும் அனைத்து காய்கறிக் கடைகள் திங்கள்கிழமை காலை வழக்கம்போல திறக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நண்பகல் 12 மணிக்கு காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கியில் தெரிவித்தனா். இதையடுத்து, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

சேலத்தில் மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன. முழு பொதுமுடக்கம் காரணமாக சேலத்தில் உள்ள அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மாநகரப் பகுதியில் 24 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா். மேலும், தேவையின்றி வெளியே வரும் நபா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பியும், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி பேருந்து நிலையம், எடப்பாடி- சேலம் பிரதான சாலை, ஜே.கே.பி. சாலை, உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நண்பகல் முதல் வெறிச்சோடி காணப்பட்டது. ராஜாஜி பூங்கா, தினசரி மாா்க்கெட், ரவுண்டானா ஆகிய பகுதிகள் வெறிச்சோடின. நகரின் ஒரு சில இடங்களில், மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல இயங்கின. நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் தனியாா் மருத்துவமனைகளில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. நகரின் பிரதான சாலைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால், பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் நண்பகல் 12 மணி வரை உணவகங்கள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், தேநீா் கடைகள், பூக்கடைகள், சாலையோரக் கடைகள் இயங்கின. இருப்பினும் வாடிக்கையாளா்கள் சொற்ப அளவிலேயே இருந்தனா்.

நாள்முழுவதும் ரத்தப் பரிசோதனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், தண்ணீா் வாகனங்கள், பால் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கின. தம்மம்பட்டியிலுள்ள உழவா்சந்தை வழக்கம் போல இயங்கின. வீரகனூா், கெங்கவல்லி, செந்தாரப்பட்டி சுற்றுவட்டார ஊா்களிலும் பொதுமுடக்கம் அமைதியாக நடைபெற்றது.

முழு ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இன்றி திங்கள்கிழமை வெறிச்சோடிய சேலம்-கருப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி.

பேருந்துகள் இன்றி வெறிச்சோடிய சேலம் புதிய பேருந்து நிலையம்.

சேலம், ஐந்து சாலை பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடிய சாலை.

சேலம் பெரியாா் மேம்பாலம் பகுதியில், உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் செல்பவா்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பும் போக்குவரத்து போலீஸாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

பரமத்தி வேலூரில் ரூ. 36 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

SCROLL FOR NEXT