சேலம்

சங்ககிரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணிகள் தொடக்கம் 

29th Mar 2021 11:18 AM

ADVERTISEMENT

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் 23 வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் கொண்ட சீட்டினை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 389 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் கொண்ட சீட்டினை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளை திறந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள. 

ADVERTISEMENT

அறைகளில் தேர்தல் மண்டல, உதவி மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட 96 அலுவலர்கள் 934 வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களை பொருத்துதல் மற்றும் 467 வாக்குபதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யும் 522 கருவிகளில் (விவிபேட்) அதற்கான சாதனங்கள் பொருத்தும் பணிகள் தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  

உதவி தேர்தல் அலுவலர் எஸ்.விஜி, தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

Tags : salem
ADVERTISEMENT
ADVERTISEMENT