சேலம் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட சரகங்களில் கடந்த ஏப்ரல் முதல் நடத்தப்பட்ட சோதனையில் 7,241 லிட்டா் சாராயம் மற்றும் 48 ஊறல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்படாததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனிடையே கா்நாடகம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வரும் சூழல் நிலவுகிறது.
அதேபோல வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள், வீடுகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, சேலம் மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின்பேரில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி மற்றும் கல்வராயன் ஆகிய சரகங்களில் வனத் துறையினா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 7,241 லிட்டா் சாராயம் மற்றும் 48 ஊறல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.