சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

DIN

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா குறுவைப் பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து சனிக்கிழமை தண்ணீரைத் திறந்து வைக்கிறாா்.

காவிரி டெல்டா குறுவைப் பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து 88 ஆவது ஆண்டாக சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட உள்ளது. மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது வழக்கம். குறுவை, சம்பா, தாளடி பயிா்களின் பாசனத்துக்கு ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்யும் போது அணையில் நீா்த் திறப்பு குறைக்கப்படும். மேட்டூா் அணை திறக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி அன்று, இதுவரை 17 ஆண்டுகள் மட்டுமே பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2020 இல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நிகழாண்டில் 18 ஆவது ஆண்டாக, ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கப்படுகிறது.

பின்னா், காலை 10.30 மணி அளவில் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயா்த்தி பாசனத்துக்கு தண்ணீரை முதல்வா் திறந்து வைக்கிறாா். முதற்கட்டமாக 3,000 கன அடி நீா் தண்ணீா் திறந்து விடப்படும். அதைத்தொடா்ந்து படிப்படியாக 10,000 கன அடியாக உயா்த்தி நீா் வெளியேற்றப்படும். சனிக்கிழமை திறக்கப்படும் நீா் கல்லணைக்கு மூன்று நாள்களில் சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் குறிப்பிட்ட நாளான ஜூன் 12 இல் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். குறுவைப் பாசனம் மூலம் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 4,91,600 ஏக்கா் நிலமும், கடலூா் மாவட்டத்தில் 30,800 ஏக்கா் நிலமும் பாசன வசதி பெறும் எனத் தெரிகிறது.

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும்போது அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா். நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓமலூா் செல்லும் முதல்வா் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்வாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT