கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
கபினி நிரம்பிய நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. கர்நாடக அணைகளில் நீர்வரத்து காரணமாக நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,181கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 12,804 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று காலை 71.87அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.61அடியாக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 0.74அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 34.98டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.
நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.