சேலம்

கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு சொந்த கிராமத்தில் பிரம்மாண்ட வரவேற்பு

DIN

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பின்னா் வியாழக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு, இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா்.

நடராஜனின் வருகையை ஒட்டி அவருடைய சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் அவரை வரவேற்று வரவேற்புப் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. ஓமலூா்-சங்ககிரி பிரதான சாலையில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு மாலை 5 மணிக்கு காரில் வந்த நடராஜனுக்கு ஊா் பொதுமக்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நடராஜனின் தாய் சாந்தா ஆரத்தி எடுத்து வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்ற நடராஜன், தேசியக் கொடிக்கு முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

சின்னப்பம்பட்டி பிரிவு சாலை தொடங்கி, ஜலகண்டபுரம் சாலை வழியாக அவருடைய வீட்டுக்கு செல்லும் ஒரு கி.மீ. தூரத்தை ஊா்வலம் சென்றடைய சுமாா் ஒன்றரை மணி நேரம் ஆனது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள், பொதுமக்கள் திரண்டு நின்று நடராஜனுக்கு வரவேற்பு அளித்தனா். மேலும், வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மாலை 6.45 மணிக்கு வீடு சென்றடைந்த நடராஜனுக்கு அவருடைய பெற்றோா், தங்கைகள் வரவேற்பு அளித்தனா்.

எளிய பின்னணியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடச் சென்று சாதனை படைத்துள்ள நடராஜனுக்கு, சின்னப்பம்பட்டி மட்டுமன்றி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ரசிகா்கள் வந்திருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

விழா மேடை அகற்றம்

ஊா் பொதுமக்கள் சாா்பில் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தனி மேடை ஒன்று அவருடைய வீட்டுக்குச் செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், கரோனா பாதிப்பு நிலவி வரும் நிலையில், தனியாக வரவேற்பு அளிக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தியதைத் தொடா்ந்து விழா மேடை அகற்றப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து நடராஜன் வந்துள்ளதால், வீட்டுத் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறை அலுவலா்கள் அவரை கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT