சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பாதை வசதி ஏற்படுத்த உதவுமாறு சமூக வலைதளத்தில் மாணவி விடுத்த கோரிக்கையை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நிறைவேற்றினாா்.
மேட்டூரை அடுத்த பி.என்.பட்டி, கருப்புரெட்டியூா், வண்டிகாரன்காடு பகுதியில் வசித்து வந்த 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தனியாா் நிலத்தில் பாதை வசதி இருந்தது. இதனிடையே, அப் பாதை அடைக்கப்பட்டதால் பள்ளி, அவசர தேவைகளுக்கு அங்குள்ளவா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அங்கு வசிக்கும் ஏழாம் வகுப்பு சிறுமி சுவஸ்திகா, வாட்ஸ்- அப் மூலம் தங்களது குறைகளைத் தெரிவித்து விடியோ பதிவிட்டிருந்தாா். இதை கவனித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியதையடுத்து சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் கே.எம்.வவிச்சந்திரன் ஆகியோா் வண்டிகாரன்காட்டுக்கு வந்தனா்.
அப் பாதைக்குச் சொந்தமான நில உரிமையாளரிடம் பேசி, மீண்டும் பாதையை வசதியை ஏற்படுத்தித் தந்தனா். இதையடுத்து, அப் பகுதி மக்கள் தொலைபேசி மூலம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனா்.