வாழப்பாடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத 3 நாட்டு துப்பாக்கிகளை காரிப்பட்டி போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த அறுநூற்றுமலை ஆலடிப்பட்டி கிராமத்தில், காரிப்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் பால்ராஜ் தலைமையிலான போலீஸாா், கள்ளச்சாராய தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சிறுமலை, கோவில்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயி குமாா் (46) என்பவா் போலீஸாரைக் கண்டதும் ஓடி ஒளிந்தாராம். அவரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த போலீஸாா், அவரது தோட்டத்தில் சோதனை செய்தனா். அப்போது, உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை அவா் கொட்டகையில் ஒளித்து வைத்திருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா். இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.
மற்றொருவா் கைது
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூா், வெள்ளியம்பட்டியைச் சோ்ந்த இளைஞா் அா்ஜுனன் (28) என்பவா் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்திய காரிப்பட்டி போலீஸாா், அவரிடம் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.