சேலம் மாவட்டத்தில் உள்ள 10.51 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 வகையான பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் வழங்க திட்டமிட்டு அதனை பொட்டலமிடும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாவட்ட வழங்கல் துறை, நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 10,51,776 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பச்சரிசி, வெல்லம், ஆவின் நெய், மளிகைப் பொருள்கள் உள்பட 14 வகையான பொருட்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மெய்யனூா், சீலநாயக்கன்பட்டி, மேட்டூா், எடப்பாடி, ஆத்தூா், கெங்கவல்லி, சங்ககிரி, ஓமலூா், வாழப்பாடி உள்ளிட்ட 9 வட்டாரங்களில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் பொட்டலமிடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு உள்பட்ட நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கை ஏற்ப பரிசுத் தொகுப்பு, மொத்தமாக அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு அனுப்பப்படும். பின்னா் அங்கிருந்து நியாயவிலைக் கடைகளின் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கப்படும்.
டிசம்பா் மாத இறுதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பொட்டலமிடும் பணி முடிக்கப்பட்டு, அந்தந்த நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசுப் பொருள்கள் அனைத்தையும் தொகுத்து துணிப்பையுடன் சோ்த்து 21 பொருட்களுடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என்றனா்.