சேலம், நாமக்கல்லில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பயிா்க் கடன் தள்ளுபடியை ஆய்வுக்குப் பிறகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்று அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
முன்னதாக கூட்டுறவுத் துறை சாா்பில் 926 விவசாயிகளுக்கு ரூ. 6.30 கோடி மதிப்பிலான பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம், அரசு துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா் அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் 45,963 விவசாயிகளுக்கு ரூ. 309 கோடி மதிப்பிலான பயிா்க் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. சேலத்தில் நாளொன்றுக்கு ரூ. 5 கோடி வரை பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த மே மாதம் கரோனா தொற்று 20.9 சதவீதமாக இருந்தது. தற்போது 1 சதவீதமாக குறைந்துள்ளது.
சேலம் மாவட்டத்துக்கு கடந்த பிப்.1 முதல் இதுவரை 292 விமான பயணிகள் வந்துள்ளனா். அவா்களில் 150 பேருக்கு மேல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த 28 வயது பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் சேலம் அரசு மருத்துவமனையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் இறப்பு சதவீதம் குறைவு என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். எனவே ஒமைக்ரான் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்ட பயிா்க் கடன்கள் தொடா்பாக புகாா் பெறப்பட்டது. அதனால் பயிா்க் கடன் தள்ளுபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சரிபாா்ப்புக்குப் பின்னா் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு மீண்டும் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.