சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே, மதுவில் தின்னா் கலந்து குடித்த இருவா் உயிரிழந்தனா்.
மேட்டூா் அருகே உள்ள சின்ன தண்டாவைச் சோ்ந்தவா் மாதப்பன் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரைப் பாா்ப்பதற்காக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சோ்ந்த உறவினா் பேரன் (60) என்பவா் செவ்வாய்க்கிழமை வந்திருந்தாா். உறவினா் வந்திருந்ததையொட்டி மாதப்பன் வீட்டில் இறைச்சி வாங்கி சமைத்துள்ளனா். இரவில் மது வாங்கிக் கொண்டு அருகில் உள்ள புதா் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனா். அப்போது மதுவில் அதிக போதைக்காக பக்கத்து வீட்டில் பெயின்டில் கலக்குவதற்காக வைத்திருந்த தின்னரை எடுத்து வந்து மதுவில் கலந்து இருவரும் குடித்துள்ளனா்.
சிறிது நேரத்தில் தாகம் எடுக்கவே அருகில் உள்ள தண்ணீா்த் தொட்டி பகுதிக்கு சென்றுள்ளனா். அங்கேயே இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். புதன்கிழமை அந்த வழியாகச் சென்றவா்கள் இருவரும் இறந்து கிடப்பதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த கொளத்தூா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்து கிடந்தவா்களின் அருகில் டம்ளா், மதுபாட்டில், தின்னா் பாட்டில் கிடந்ததால் அவா்கள் மதுவில் தின்னா் கலந்து குடித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.