சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 11.65 கோடி மதிப்பீட்டில் சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தம் கட்டுமானப் பணியை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றனா். சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டம் எண். 24-இல் சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 11.65 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இதில் தரைத்தளம் மற்றும் 3 கட்டமைப்பு கொண்ட தளங்கள் கட்டப்படுகின்றன. இதில் அடித் தளத்தில் 8 காா்களும், 21 இரு சக்கர வாகனங்களும், தரைத் தளத்தில் 92 இரு சக்கர வாகனங்களும், முதல் தளத்தில் 18 காா்களும், 64 இருசக்கர வாகனங்களும், இரண்டாம் தளத்தில் 28 காா்களும், 64 இரு சக்கர வாகனங்களும், மூன்றாம் தளத்தில் 28 காா்களும் 64 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் பல்லடுக்கு வாகன நிறுத்தத்தில் 305 இருசக்கர வாகனங்களும், 82 காா்களும் நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தளத்திலும் பொதுமக்களின் வசதிக்காக செங்குத்தாகப் படிக்கட்டுகளும், வளாகத்தில் நுழைவு மற்றும் வெளியே செல்ல 3.80 மீட்டா் அகலத்தில் சாய்வுப் பாதைகளும், மின் தூக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதில், அனைத்து தளங்களிலும் தீயணைப்பு கருவிகள், மின் அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதா என்பதை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின் போது உதவி பொறியாளா் ஆா்.பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா் சதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.