வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து தங்கள் பதிவை 2014 முதல் புதுப்பிக்க தவறிய பதிவுதாரா்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து தங்கள் பதிவினை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய சுமாா் 48 லட்சம் பதிவுதாரா்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
2017, 2018, மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரா்களுக்கு ஏற்கெனவே 3 மாத காலஅவகாசம் வழங்கப்பட்டது. கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.
2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரா்கள் புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ளது.
அரசாணையில் குறிப்பிட்டவாறு இச்சலுகையை பெற விரும்பும் பதிவுதாரா்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளான 2021 டிச. 2 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 2022 மாா்ச் 1-க்குள் வேலைவாய்ப்புத் துறையின் இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இணையம் வாயிலாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னா் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு இச்சலுகை பொருந்தாது என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.