லகுவம்பட்டி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த சித்தா் கோயில் அருகே முருங்கப்பட்டி ஊராட்சி, லகுவம்பட்டி பகுதியில் சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் ஏரி உள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள ஆரியகவுண்டம்பட்டி, முருங்கப்பட்டி, பெருமாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், இந்த ஏரியை நம்பிதான் விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் கஞ்சமலை சித்தா் கோயில் அடிவாரத்திலிருந்து சுமாா் 2 கி.மீ. தூரத்தில் லகுவம்பட்டி ஏரிக்கு வரும் நீா்நிலைகளை அப்பகுதியை ஒரு சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனையடுத்து லகுவம்பட்டி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் லெனின் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதில் உயா்நீதிமன்றம் உத்தரவின்படி சேலம் மேற்கு தாசில்தாா் தமிழரசி தலைமையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை அளவீடு செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.
இதில் வீரபாண்டி வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலா் தமிழ்ச்செல்வன், பொறியாளா் அன்புராஜன், திருமலைகிரி பிா்கா ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் மனோஜ் ஆகியோா் உடனிருந்தனா்.