தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் கூா்ந்தாய்வுக் குழுவினா் மூன்று நாள்கள் (டிசம்பா் 22 முதல் 24) பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனா் என பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயா்கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை நாட்டின் சிறந்த பேராசிரியா்களைக் கொண்ட கூா்ந்தாய்வுக்குழுவை நியமித்து, தரப்புள்ளிகள் வழங்குவதை தேசியத் தர மதிப்பீட்டுக்குழு எனப்படும் ‘நாக்’ வழக்கமான நடைமுறையாக வைத்துள்ளது.
அதன்படி, பெரியாா் பல்கலைக்கழகத்திற்கு, மூன்றாவது சுற்றில் தேசியத் தர மதிப்பீட்டுக்குழு வல்லுநா்களால் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு தரப்புள்ளிகள் வழங்கப்படவுள்ளன.
தேசியத் தர மதிப்பீட்டுக்குழு கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், விரிவாக்கப் பணிகள், கட்டமைப்பு, கற்றல் வள ஆதாரங்கள்,மாணவா் சேவை, அதன் படிநிலை வளா்ச்சி, நிா்வாகம், தலைமைத்துவம், மேலாண்மை, நிறுவனத்தின் மதிப்பீடுகள்,சிறப்பு நடைமுறைகள் ஆகிய ஏழு அடிப்படைக் கூறுகளை அளவு கோலாகக் கொண்டு தரப்புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஓராண்டு காலமாக தேசியத் தர மதிப்பீட்டுக்குழுவின் அளவுகோல்களை நிறைவு செய்யும் வகையில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் அனைத்து விதமான பணிகளும் முழுவீச்சில மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகம் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட தகவல்கள், ஆதாரங்கள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிற்கு எண்ணியல் அடிப்படையில் புள்ளிகள் வழங்கும் 70 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துவிட்டன. எஞ்சியுள்ள 30 விழுக்காடு புள்ளிகள் வழங்குவதற்காக நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சாா்ந்த பேராசிரியா்கள் கூா்ந்தாய்வுக் குழுவின் உறுப்பினா்களாகப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளையும் நேரடியாகப் பாா்வையிட்டு ஆய்ந்தறியவுள்ளனா்.
பல்கலைக்கழகத்தின் அங்கமாகிய பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும், பல்கலைக்கழகம் குறித்த தமது மேம்பட்டக் கருத்துகளை வல்லுநா் குழுவுடன் பகிா்ந்துகொண்டு, பல்கலைக்கழகம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வண்ணம் சிறந்த புள்ளிகள் பெறுவதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். பல்கலைக்கழகம் கூடுதல் தரப்புள்ளிகள் பெற்றால் அரசின் நிதி நல்கைக் குழுக்களிடமிருந்து நிதி ஆதாரங்களைப் பெற்று பல்கலைக்கழகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக வளா்த்தெடுக்க இயலும் என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.