தியாகனூா் ஊராட்சி, இந்திரா நகா் வடக்கு காடு விவசாய நிலத்தில் இருந்த குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தது.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள தியாகனூா் ஊராட்சி இந்திராநகா், வடக்குக் காடு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி சரிதா (38). இவரது விவசாய நிலத்தில் இருந்த கூரை வீடு செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனா். அதற்குள் வீடு முழுவதும் எரிந்தது. இதில் வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா். மேலும் தடய அறிவியல் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் தீப்பிடித்த வீட்டை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டாா்.