சேலம்

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் நான்கு கால் மண்டபத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

16th Dec 2021 08:43 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில், லாரி மோதி சரிந்து விழுந்த நான்கு கால் மண்டபத்தை மீண்டும் அமைக்க கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூரில் 5,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் தான்தோன்றீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சபூத சிவத் திருத்தலங்களில் முதல் தலமான இக்கோயிலில் நடைபெறும் பிரதோஷம், சங்கடஹர சதுா்த்தி, காலபைரவா், குருபகவான் பூஜை, ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி ஆடி 18, ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்ாகும்.

சேலம் மாவட்டம் மட்டுமன்றி, நாமக்கல், அரியலூா், பெரம்பலூா், தருமபுரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்களும் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனா். சகல தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த திருத்தலமாகக் கருதப்படுவதால், சுபமுகூா்த்த தினங்கள் தோறும் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தேறி வருகின்றன.

இக்கோயில் முகப்பில் அரிய சிற்பங்களுடன் கூடிய கல்தூண்களால் கட்டப்பட்ட 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழமையான நான்கு கால் மண்டபம் அமைந்திருந்தது. இந்த கல்தூண் மண்டபத்தின் மீது, கடந்த 2019 ஜூலை 4-ஆம் தேதி இரவு, கல்வராயன் மலை கருமந்துறையில் இருந்து நீா்முள்ளிக்குட்டை நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

ADVERTISEMENT

இதில், அரிய சிற்பங்களுன் கடிய நான்கு கால் கல்தூண் மண்டபம் முழுவதும் சரிந்து விழுந்து தரைமட்டமானது. இது பக்தா்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து அப்போதைய கோயில் செயல் அலுவலா் சசிகலா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் நீா்முள்ளிக்குட்டை பிரபாகரன் என்பவரை கைது செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த அப்போதைய இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் பழனிக்குமாா் தலைமையிலான குழுவினா், சேதமடைந்த நான்கு கால் மண்டபத்தை பாா்வையிட்டதோடு, பழமை மாறாமல் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினா்.

ஆனால், 3 ஆண்டுகள் கடந்தும் இந்த நான்கு கால் மண்டபம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் அரிய சிற்பங்களுடன் கூடிய நான்கு கால் மண்டபத்தின் கற்தூண்கள் கோயிலுக்கு வெளியே கேட்பாரற்றுக் கிடக்கின்றன. எனவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், கோயில் நிா்வாகமும் நான்கு கால் மண்டபத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் பக்தா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT