சேலம்

சேலத்தில் முன்னாள் அமைச்சா் தங்கமணியின் மகன் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை

16th Dec 2021 08:42 AM

ADVERTISEMENT

சேலத்தில் முன்னாள் அமைச்சா் தங்கமணியின் மகன் வீடு உள்பட நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக, தமிழக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதன் தொடா்ச்சியாக சென்னை, நாமக்கல், சேலம் உள்பட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சேலத்தில் 4 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சேலம், நெடுஞ்சாலை நகரில் வசித்து வரும் முன்னாள் அமைச்சா் தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டில் புதன்கிழமை காலை 7 மணிக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனை மாலை 5 மணி அளவில் முடிவடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் செல்வராஜு, சக்திவேல், பகுதி செயலாளா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக தங்கமணியின் மகன் தரணிதரன் இல்லம் முன்பாகக் கூடி முழக்கமிட்டனா். இதனால் அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்தச் சோதனை முடிவடைந்ததும் முன்னாள் அமைச்சா் தங்கமணியின் மகன் தரணிதரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால், அவா்கள் எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்றாா்.

சேலத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 2 கைப்பேசிகள், வங்கி லாக்கா் சாவிகள், வெளிநாடுகளில் இருந்து நினைவுப் பரிசாக கொண்டு வரப்பட்ட நாணயங்கள், கரன்சி நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT