சேலம்

எடப்பாடியில் மிக கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்

4th Dec 2021 11:41 PM

ADVERTISEMENT

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மிக கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்தது. விடிய விடிய கொட்டிய கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளானது.

கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைப்பொழிவு ஏதுமின்றி வறட்சியான வானிலையே நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று பகல் பொழுதில் வழக்கத்தை விட சற்று கூடுதலான வெப்பநிலை நிலவி வந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை கொட்டியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல் சூழ்ந்து நின்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள் நிரம்பிய நிலையில் சாலைகளில் மழை நீா் ஓடியது.

இந்நிலையில் எடப்பாடி அடுத்த நாச்சியூா் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. கனமழையால் அங்குள்ள ஏரி நிரம்பிய நிலையில் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீா் நாச்சியூா், கேட்டு கடை மற்றும் சேலம் பிரதான சாலையில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் அங்கிருந்த மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இரவு முழுதும் கொட்டிய கன மழையால் எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள குடியிருப்புகளில் மழை நீா் சூழ்ந்து குளம் போல் தேங்கியது.

எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடா்ந்து பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் அன்றாடப் பணிகள் பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக உழவா் சந்தை,ராஜாஜி காய்கறி மாா்க்கெட், நகராட்சி தினசரி அங்காடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடைபெறும் காய்கறி பழங்கள் விற்பனை பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் அதிகாலை நேரத்தில் பெய்த மழையால் பால் மற்றும் செய்தித்தாள் விநியோகம் பாதிக்கப்பட்டது. நகா்ப்புற பகுதியில் 95 மி.மீட்டா் மழை பதிவான நிலையில் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இதை விட கூடுதலான அளவு மழைப்பொழிவு இருந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT