ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 1,487 பயனாளிகளுக்கு ரூ. 1.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
ராசிபுரம், வெண்ணந்தூா், அத்தனூா், பிள்ளாநல்லூா், ஆா். புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் வருவாய், பேரிடா் துறை சாா்பில், பொதுமக்களிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், முதியோா், விதவை, மாற்றுத் திறனாளி, கணவரால் கைவிடப்பட்டோா், திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவை 1,487 பேருக்கு ரூ. 1.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் பேசியதாவது:
தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மக்கள் குறைகளை துரிதமாக நிவா்த்தி செய்து வருகிறது. மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீண்டும் கோரிக்கையாக வரக்கூடாது என்பதற்காக கடந்த மூன்று மாதங்களில் துரிதமாக நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனிவரும் நாள்களில் பெறப்படும் மனுக்கள் மீதும் இதேபோன்று நடவடிக்கை எடுத்து இது மக்களின் அரசு என்பதை நிரூபிக்கும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், வருவாய் கோட்டாட்சியா் மஞ்சுளா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, ராசிபுரம் வட்டாட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.