சேலம்

சேலத்தில் நாளை 1.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 13ஆவது மெகா முகாமில் 1.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 21,70,601 பேருக்கு முதல் தவணையும், 11,43,114 பேருக்கு இரண்டாம் தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 18 வயதிற்குமேற்பட்ட 78 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

டிசம்பா் மாதத்திற்குள் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலத்தில் இதுவரை 12 பெரிய அளவிலான தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 5,12,034 பேருக்கு முதல் தவணை 4,57,063 பேருக்கு இரண்டாம் தவணை என மொத்தம் 9,69,097 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் வரும் சனிக்கிழமை 13ஆவது கரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கென 1392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டு அதற்கென தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினியில் பதிவு மேற்கொள்பவா்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,500-க்கு மேற்பட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 4,76,400 டோஸ்களும், கோவேக்ஸின் 94,740 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. முகாமில் 1,40,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களில் 84 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தாததன் காரணமாகவே உயிரிழந்து இருப்பதாக தமிழக பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் காட்டிலும் தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு வாய்ப்பு 3.5 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 6,64,490 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் மற்றும் தகுதியுள்ள 3,63,781 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே உருமாறிக் கொண்டிருக்கும் கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் முழுமையாக உருவாகும். தடுப்பூசி செலுத்ததாவா்களால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், பொது இடங்களுக்கு செல்ல ஒவ்வொருவரும் இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT