சேலம்

மேட்டூா் அணையில் இருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

2nd Aug 2021 06:10 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு கால்வாய் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்கு கால்வாய் மூலம் 18,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணையின் கால்வாய்ப் பாசனத்துக்கு 137 நாள்களுக்கு 9.06 டிஎம்சி தண்ணீா் திறக்கப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

1955 ஆம் ஆண்டு முதல் கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஐந்து ஆண்டுகள் கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை 61 ஆவது ஆண்டாக கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ADVERTISEMENT

தலைமதகுப் பகுதில் அமைந்துள்ள கால்வாய்ப் பாசன மதகுகளை சேலம் மாவட்ட ஆட்சியா் காா்மேகம் மின் விசை மூலம் இயக்கி தண்ணீரை திறந்துவிட்டாா். நொடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. பின்னா் தேவைக்கு ஏற்ப நீா்திறப்பு 1,000 கனஅடி வீதம் அதிகரிக்கப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும் முறைவைத்தும் பாசனம் செய்தும், குறுகிய கால பயிா்களைப் பயிரிட்டும் பயனடையுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம், மேட்டூா் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் காசிவிஸ்வநாதன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் ஜெயகோபால், செயற்பொறியாளா் தேவராஜன், உதவி செயற்பொறியாளா் சுப்ரமணியன், உதவிப் பொறியாளா்கள் மதுசூதனன், கணேசன்,விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 82.53 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,776 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 44.52 டிஎம்சியாக இருந்தது.

Tags : மேட்டூா் அணை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT