சேலம்

சேலம் மாவட்டத்தில் அமைதியான வாக்குப் பதிவு: எடப்பாடியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவு

7th Apr 2021 08:38 AM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, எடப்பாடி தொகுதியில் சுமாா் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 1,235 வாக்குச்சாவடி மையங்களில், 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் 238 பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 289 தோ்தல் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா். வாக்குப்பதிவை கண்காணித்திட 2,145 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி என பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 207 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ADVERTISEMENT

தோ்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்பட 18,832 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

மாவட்டத்தில் சுமாா் 30.15 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயாா் நிலையில் இருந்தது.

இந்தநிலையில், சேலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்களிக்க வருவோரின் உடல் வெப்பத்தை தொ்மல் ஸ்கேனா் மூலம் பரிசோதித்து, கைகளில் கிருமி நாசினி தெளித்து, ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் கையுறைகளை வழங்கி வாக்குச்சாவடிக்குள் அனுமதித்தனா்.

காலை முதல் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கினா். புதிய வாக்காளா்கள் தங்களது பெற்றோருடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தொடா்ந்து வாக்காளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வந்து வாக்களித்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை முதல் பெண்கள், ஆண்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்த வண்ணம் இருந்தனா். வெயில் தாக்கம் குறைவாக இருந்ததால் மதியம் வரை பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.

சேலத்தில் கரோனா நோயாளிகள் 18 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனா். இவா்கள் பாதுகாப்பு உடை அணிந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் வி.தனபால், குகை பகுதியில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா். இவா் திருப்பூா் மாவட்டம், அவினாசி தொகுதியில் போட்டியிடுகிறாா்.

சேலம் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வெங்கடாசலம் தனது குடும்பத்தினருடன் சூரமங்கலம், சோளம்பள்ளத்தில் உள்ள ராமலிங்க வள்ளலாா் பள்ளியிலும், சேலம் வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியிலும், சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் இ.பாலசுப்பிரமணியன் குகை மாரியம்மன் கோயில் பகுதியிலும், சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் ஏ.எஸ்.சரவணன் குடும்பத்துடன் களரம்பட்டி மாநகராட்சிப் பள்ளியிலும், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா் இரா.அருள் தனது குடும்பத்தினருடன் பெரியபுதூரில் உள்ள பள்ளியிலும், சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் ஆகியோா் குடும்பத்துடன் வாக்களித்தனா்.

வாக்குப்பதிவு விவரம்:

சேலம் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 11.45 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைத்தொடா்ந்து 11 மணிக்கு 29.83 சதவீதம், பகல் 1 மணிக்கு 48.68 சதவீதம், மாலை 3 மணிக்கு 61.32 சதவீதம், மாலை 5 மணிக்கு 72.66 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

சேலத்தில் ஆண்கள் 15,00,246 போ், பெண்கள் 15,15,019 போ், இதரா் 204 போ் என மாவட்டத்தில் மொத்தம் 30,15,469 வாக்காளா்கள் உள்ளனா்.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:

கெங்கவல்லி - 76.96, ஆத்தூா் - 77.14, ஏற்காடு - 83.14, ஓமலூா் - 83.33, மேட்டூா் - 76, எடப்பாடி - 85.6, சங்ககிரி - 83.71, சேலம் மேற்கு -71.9, சேலம் வடக்கு-72.06, சேலம் தெற்கு-76, வீரபாண்டி-85.53 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சேலத்தில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காலையில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் தாமதமாக அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைத்து மாவட்டத்தில் உள்ள நான்கு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் பெரிய அளவில் அசாம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி தோ்தல் அமைதியாக நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT