சேலம்

நெல் விதைப் பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற அறிவுறுத்தல்

25th Sep 2020 07:55 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட விதைச் சான்றிதழ் மற்றும் அங்ககச் சான்றிதழ் உதவி இயக்குநா் க.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வதற்காக விதைச்சான்று அலுவலா்கள் விவசாயிகளை நேரடியாக அறிவுறுத்தி வருகின்றனா்.

விதைப்பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், முதல் கட்டமாக சம்பா பருவத்துக்கு உண்டான மத்தியகால அல்லது நீண்டகால ரக ஆதாரநிலை ஒன்று அல்லது ஆதார நிலை இரண்டு நெல் விதைகளை வேளாண்மை விரிவாக்க நிலையம் அல்லது அரசு அங்கீகரிக்கபட்ட நிறுவனங்களில் வாங்கி அதற்கான விற்பனை பட்டியல், வெள்ளை நிறச்சான்றட்டை, விதைப்பண்ணை அமைவிடம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் மூலம் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், நெல் விதைப்பண்ணை பதிவு கட்டணம் ஓா் அறிக்கைக்கு ரூ.25, வயல் ஆய்வு கட்டணம் ஏக்கருக்கு ரூ.50, விதைப்பரிசோதனை கட்டணம் ரூ.30 என ஏக்கருக்கு ரூ.115 செலுத்த வேண்டும். நெல் விதைப்பண்ணையானது திருந்திய நெல் சாகுபடி முறையிலோ இயந்திர நடவு மூலமாகவோ அல்லது 8 அடிக்கு ஓா் அடி இடைவெளி விட்டோ நடவு செய்யப்பட வேண்டும்.

ADVERTISEMENT

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணை சம்பந்தப்பட்ட பகுதி விதைச்சான்று அலுவலரால், வயல் ஆய்வு செய்யப்பட்டு, பயிா் விலகு தூரம், கலவன்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்ட களைகள் மற்றும் நோய்கள் போன்றவை குறித்து பூப்பருவம் மற்றும் அறுவடை சமயத்தில் ஆய்வு செய்யப்பட்டு வயலின் தரம் உறுதி செய்யப்படும்.

பின்னா், விதைப்பண்ணையானது உரிய காலத்தில் அறுவடை செய்யப்பட்டு, விதைச்சான்று நடைமுறைகளின்படி 13 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட வயல்மட்ட விதையானது அரசு அங்கீகாரமுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்தம் செய்த பின்னா் விதையின் தரத்தை உறுதி செய்ய பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு விதைச்சான்று அலுவலரால் மாதிரி எடுக்கப்படும்.

இந்த மாதிரியானது அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் புறத்தூய்மை, முளைப்புத்திறன்,ஈரப்பதம், பிற ரக கலவன்கள், களை விதைகள் மற்றும் பூச்சி நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு ஆய்வு செய்து அதில் தேறிய விதைக்குவியல்களை உரிய அளவு கொள்கலனில் நிரப்பி, பின்னா் சான்றட்டை மற்றும் உற்பத்தியாளா் அட்டை பொருத்தப்பட்டு நெல் விதைகள் விற்பனைக்கு அனுப்பப்படும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதை நெல்லுக்கு வேளாண்மைத்துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

எனவே விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி, விதைப்பண்ணைகள் அமைத்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

...

ADVERTISEMENT
ADVERTISEMENT