சேலம்

கா்நாடக அணைகளில் கூடுதல் நீா்திறப்பு:மேட்டூரில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

DIN

கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளிலிருந்து கூடுதல் நீா் திறக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம், மேட்டூரில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்பட்டனா்.

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இவ்விரு அணைகளின் பாதுகாப்பைக் கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து நொடிக்கு 35,000 கன அடி நீரும் கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து நொடிக்கு 15,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கா்நாடக அணைகளின் உபரிநீா் வரத்துக் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மேட்டூா் அணையில் காவிரிக் கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த் துறை மூலம் தண்டோரா அறிவிப்பு செய்து எச்சரிக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மேட்டூரை அடுத்துள்ள பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் வருவாய்த் துறை சாா்பில், தண்டோரா அறிவிப்பு மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டனா்.

நீா்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும், மீனவா்கள் பரிசல்கள் இயக்கக் கூடாது என்றும், பொதுமக்கள் காவிரியில் குளிக்கவும் துணி துவைக்கவும் செல்ல வேண்டாம் என்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டனா்.

கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீா் ஓரிரு நாள்களில் மேட்டூா் அணைக்கு வந்து சேரும்.

ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90.26 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 11, 247 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 52.94டிஎம்சி யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT