சேலம்

60 ஆண்டுகளாக வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்கும் விவசாயி

17th Sep 2020 01:02 PM | பெரியார்மன்னன்

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விவசாயி ஒருவர், தனது சொந்த நிலத்தில் திண்ணை அமைத்து, 60 ஆண்டுகளாக தினந்தோறும் தண்ணீர் பானை வைத்து வழிப்போக்கர்களின் களைப்பை நீக்கி தாகம் தீர்த்து, மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார். தாகம் தீர்த்து வரும் விவசாயியை, வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பாராட்டிச் செல்கின்றனர்.

கிராமப்புறங்களுக்கு போதிய போக்குவரத்து வசதியில்லாத காலத்தில், பெரும்பாலானோர் தலைச்சுமையோடு கால்நடையாய் சென்றனர். வழிப்போக்கர்கள் யாருடைய உதவியுமின்றி தலைச்சுமையை இறக்கி வைத்து இளைப்பாறவும், பின்னர் எவர் தயவுமின்றி, பாரத்தை எளிதாக துாக்கிச் செல்லவதற்கும் வசதியாக, வாழப்பாடி பகுதி கிராமங்களில் மனித நேயம் கொண்டவர்கள், இறந்துபோன உறவினர்களின் நினைவாக சாலையோரங்களில் சுமைதாங்கி கற்களை அமைத்தனர். வசதியாய் வாழ்ந்த நற்குணம் கொண்ட செல்வந்தவர்கள் சிலர், சாலையில் நடந்து செல்லும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரை கைகளில் அள்ளி குடிப்பதற்கு வசதியாக தரைத்தளத்தில் இருந்து கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டுகளுடன் நடைக்கிணறும், கவலையை மறந்து களைப்பை நீங்க ஓய்வெடுத்துச் செல்வதற்காக, வண்ண மலர்கள் பூக்கும் நந்தவனத்தையும் அமைத்துள்ளனர்.

ஒருவரின் நினைவாக அமைக்கப்படும் நினைவுச் சின்னங்களும் கூட, மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டுமென கருதும் வாழப்பாடி பகுதி கிராம மக்களின் மனித நேயத்தை பறைச்சாற்றும் வரலாற்றுச் சுவடுகளாய், இன்றளவும் பல கிராமங்களில் சுமைதாங்கி கற்களும், நடைகிணறு மற்றும் நந்தவனங்களும் கிராமப்புற சாலையோரங்களில் கம்பீரமாய் காட்சியளித்து வருகின்றன. ஆனால் பெரும்பாலும் இவை தற்போது பயன்பாட்டில் இல்லை. வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கணவாய்மேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கவேலு (72). நாமக்கல் மாவட்டம் வேலம்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை பழனிசாமி, 65 ஆண்டுகளுக்கு முன் வாழப்பாடி அருகிலுள்ள வெள்ளாளகுண்டம் மலைக்குன்று கணவாய்மேடு பகுதியில் விவசாய நிலம் வாங்கி குடும்பத்தோடு குடியேறியுள்ளார்.

ADVERTISEMENT

விவசாயி தங்கவேல் தனது நிலத்தில் வழிப்போக்கர்களுக்கான வைத்துள்ள தண்ணீர் பானை மற்றும் தரைமட்ட திட்டு.

வெள்ளாளகுண்டம் முதல் வேப்பிலைப்பட்டி வரை செல்லும் பாதையில் அப்போது வாகன போக்குவரத்து இல்லாததால், இவ்வழியாக மலைக்குன்றை வெட்டி அமைக்கப்பட்ட கணவாய்மேடு பகுதியை கடந்து செல்லும் வழிப்போக்கர்கள் களைப்படைந்து, இவர்களது தோட்டத்திற்கு வந்து தண்ணீர் வாங்கி குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டு, சற்றுநேரம் மரத்தடி நிழலில் அமர்ந்து இளைப்பாறி ஓய்வெடுத்துச் சென்றுள்ளனர். இது வாடிக்கையாகிப்போனதால், இதனை தினந்தோறும் பார்த்து வந்த அப்போது சிறுவனாக இருந்த தங்கவேல், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க சாலையோரத்திலுள்ள தங்களது நிலத்தில், மரத்தடி நிழலில் ஒரு மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்து அருகில் ஒரு குவளையும் வைத்துள்ளார். இவ்வழியாக செல்வோர் இந்த பானை தண்ணீரை குடித்து தாகம் தீர்த்துச் சென்றனர். இதனைக்கண்ட இவரது தந்தை பழனிசாமி, ஒரு நாளும் தவறாமல், பானையில் தண்ணீர் பிடித்து வைத்து மக்களின் தாகம் தீர்க்குமாறு தனது மகன் தங்கவேலிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தினந்தோறும் அதே இடத்தில் மண்பானையை வைத்து தண்ணீர் நிரப்பி வைத்து வருகிறார். தற்போது 70 வயதை கடந்த முதியவரான தங்கவேல். தண்ணீர் பானை வைத்துள்ள இடத்தைச் சுற்றி வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி ஓய்வெடுப்பதற்கு வதியாக, தரைமட்டத் திண்ணையும் அமைத்துள்ளார். 60 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் தொடர்ந்து மனித நேயத்தோடு வழிப்போக்கர்களின் தாகம் தீர்த்து வரும் விவசாயி தங்கவேலுவை இப்பகுதி பொதுமக்களும், வழிப்போக்கர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி தங்கவேல் கூறியதாவது: கணவாய்மேடு பகுதிக்கு எனது பெற்றோர் குடியேறியபோது வெள்ளாளகுண்டம் மலைக்குன்றில் சிறுத்தைகள் கூட காணப்பட்டன. அப்போது அருகில் ஒரு வீடு கூட இல்லை. மலைக்குன்றுகளுக்கு நடுவே கரடுமுரடான பாதையாக இருந்ததால் கணவாய்மேடு பகுதியை கடப்பதற்குள், தலைச்சுமையோடு வரும் வழிப்போக்கர்கள் களைத்து விடுவார்கள்.  மிகுந்த தாகத்தோடு வரும் அனைவருக்கும் எங்களது விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று கொடுத்து வந்தோம். வழிப்போக்கர்களுக்கு எந்நேரத்திலும் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்  என தோன்றியதால், சிறு வயதிலேயே எங்கள் நிலத்தில் ஒரு திட்டு அமைத்து மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைப்பதை வழக்கமாக்கி கொண்டேன்.

60 ஆண்டுகள் கடந்தும் ஒரு நாள்கூட தவறாமல் இந்த பானையில் தண்ணீர் நிரப்பி வைத்து வருகிறேன். பானை வைக்கப்படும் இடத்தை சுற்றி தரைமட்டத்தில் திண்ணையும் அமைத்துள்ளேன். தற்போது நடந்து செல்லும் வழிப்போக்கர்கள் குறைந்து போனாலும், கார், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் வந்து இந்த பானையில் இருந்து தண்ணீர் பருகி தாகம் தீர்த்துக் கொண்டும், மரத்தடி நிழலிலுள்ள திண்ணையில் அமர்ந்து ஒய்வெடுத்தும்  செல்கின்றனர். இதனால் மனதிற்கு மனநிறைவு கிடைக்கிறது என்றார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT