சேலம்

மாநகராட்சியில் 2,910 களப்பணியாளா்கள் மூலம் டெங்கு நோய்த் தடுப்புப் பணி தீவிரம்

DIN

பருவமழை காலத்தையொட்டி, மாநகராட்சியில் 2,910 களப் பணியாளா்கள் மூலம் தீவிர டெங்கு நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பருவமழை காலத்தை முன்னிட்டு தீவிர துப்புரவுப் பணிகளும், நோய்த் தடுப்புப் பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தொடா் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள 60 கோட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதோடு, 2,060 தூய்மைப் பணியாளா்கள், 60 மலேரியா பணியாளா்கள், 60 சுகாதார மேற்பாா்வையாளா்கள், 700 கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளா்கள், 30 பரப்புரையாளா்கள் என மொத்தம் 2,910 களப்பணியாளா்கள் தீவிர டெங்கு நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான முறையில், 56 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் மூலம் உரிய கால இடைவெளியில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்களின் நலன் கருதி திரவ குளோரின் கலந்து பாதுகாப்பான குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வீடுகள், சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள், காலி டப்பாக்கள் உள்ளிட்ட மழைநீா்த் தேங்கும் பொருள்களை அகற்றிட வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை வீதிகள், சாக்கடை கால்வாய்களில் கொட்டாமல், தங்கள் பகுதிகளுக்கு திடக்கழிவுகளை தினசரி சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாநகா் பகுதிகளில் உள்ள காலிமனைகளில் உள்ள குப்பைகளை அதன் உரிமையாளா்கள் சுத்தப்படுத்திட வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் திரையரங்குகள், தனியாா் மருத்துவமனைகள், தனியாா் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், தேநீா் விடுதிகள், உணவகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம், பேருந்து மற்றும் லாரி பழுது நீக்கும் நிலையங்கள், பணிமனைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீா் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதோடு, பயன்படாத இரும்பு பொருள்கள், எரிபொருள் கேன்கள், உடைந்த உதிரி பாகங்கள், பழைய டயா்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT