சேலம்

தம்மம்பட்டியில் ஊழியர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி

23rd Nov 2020 01:46 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில், கடை ஊழியர்கள் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற மீன் கடை உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில், நடராஜா தியேட்டர் முன்புறம், பேரூராட்சி இடத்தில் ரகுநாத்(26) என்பவர் மீன் கடை வைத்துள்ளார். அவர் கடையில், அர்பத் உள்ளிட்ட 5 பேர்கள், வேலை செய்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரம் அதிகம் நடைபெற்று வந்தது. பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ரகுநாத்தின் மற்றொரு கடையில் மீன்கள் வாங்கி வருவதில், கடை ஊழியர்களுக்குள் நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
அதனால், கடை ஊழியர்கள் 5 பேர்களும், கடைக்கு வேலைக்கு செல்லாமல், அருகில் உள்ள, அரசு நூலகம் முன்பாக அமர்ந்து மற்ற நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மீன்கடை உரிமையாளர் ரகுநாத், பிசியான நேரத்தில் கடையில் வேலை செய்யாமல், இங்கு என்ன செய்கிறீர்கள் என, கேட்டுள்ளார். அதற்கு, நாங்கள் வேலைக்கு வரமாட்டோம் என, ரகுநாத்திடம் கூறியுள்ளனர். 
அதனால் கடும் ஆத்திரமடைந்த ரகுநாத்,  தனது ஸ்கார்பியோ காரை, ஸ்டார்ட் செய்து, அமர்ந்திருந்த ஊழியர்கள் மீது வேகமாக மோதியுள்ளார். கார் வேகமாக வருவதை கவனித்த சிலர் விலகி ஓடி தப்பினர். கார் மோதி ஏறியதில்,  மீன் கடை ஊழியர்கள் அர்பத் (28), விக்கி (25), விக்கி (26), ராஜ் (23), ரஞ்சித் (19) ஆகிய 5 பேர், கை, கால்களில் அடிபட்டு காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், ரகுநாத்தை பிடிக்க முயன்றபோது, அவர், காரில் தப்பினார். 
இந்த தகவல் அறிந்து, காயமடைந்தவர்களின் உறவினர்கள், ரகுநாத்தின் மீன் கடை முன்பகுதியை ஆவேசத்துடன் அடித்து, உடைத்தனர். காரை ஏற்றிக் கொள்ள முயன்ற ரகுநாத்தை உடனே கைது  செய்யக்கோரி, சுமார் 300 க்கும் மேற்பட்டோர், தம்மம்பட்டி காவல் நிலையம் முன்பு கூடினார். அவர்களை சமாதனப்படுத்திய காவல்துறையினர், காயமடைந்த மீன்கடை ஊழியர்கள் 5 பேர்களையும் சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தம்மம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, தப்பி ஓடிய மீன்கடை உரிமையாளரை தேடி வருகின்றனர். இச்சம்பவம், தம்மம்பட்டியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Tags : salem
ADVERTISEMENT
ADVERTISEMENT