சேலம்

தம்மம்பட்டியில் மின்மயானம் தேவை: சேலம், நாமக்கல், திருச்சி மாவட்ட மக்கள் பயன்பெறுவர்

9th Nov 2020 11:38 AM | எஸ். ரம்யா

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் மின்மயானம் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கூடமலை, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, மூலப்புதூர், உலிபுரம், நாகியம்பட்டி, கீரிப்பட்டி, மல்லியகரை, பச்சமலை, அரசநத்தம், சோமம்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, தகரப்புதூர், 95.பேளூர், கெங்கவல்லி, வீரகனூர், 74.கிருஷ்ணாபுரம், கடம்பூர், திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி, முருங்கப்பட்டி, தாத்தையங்கார்பேட்டை, பாதர்பேட்டை, உப்பிலியாபுரம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் மக்கள் வசித்து வருகின்றனர். 

இப்பகுதிகளில் அனைவரும் இடுகாடுகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மயானங்களில் உள்ள தகனமேடைகளில் தற்போது இறந்தவர்களின் உடல்களை எரிக்க, விறகுகளுடன் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் லாரி, பேருந்துகளின் பழைய டயர்கள் வைக்கப்பட்டும் எரியூட்டப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் டயர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது. எனவே, இப்பகுதிகளுக்கு முக்கிய மையமாக இருப்பது தம்மம்பட்டி ஆகும். சேலம் மாவட்டத்தின் எல்லையில் இருப்பதால், தம்மம்பட்டிக்கு அருகிலுள்ள நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள் மிகவும் பயன்பெறும் வகையில் மின்மயானம் அமைத்திட வேண்டும் என்பது இப்பகுதியினரின் பல வருட கோரிக்கையாக இருந்துவருகின்றது. 

இதுகுறித்து தம்மம்பட்டி பொது நலக்கமிட்டி சார்பில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர், மாநில அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தம்மம்பட்டியில் மின்மயானம் அமைக்கப்பட்டால், தம்மம்பட்டியிலிருந்து 30 கி.மீ.சுற்றளவில் உள்ளோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ், மின்மயானம் அமைக்கப்பட்டால், குறைவான கட்டணத்தில் மின்மயானம் செயல்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் கூறியதாவது, ஒவ்வொரு ஊர்களிலும் சமூக ரீதியாகவும், பொதுவான இடத்திலும் மயானங்கள் உள்ளன. புதைக்கப்படும் உடல்கள் அருகில், அடுத்தடுத்து இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்டுவந்தது.

ADVERTISEMENT

தற்போது ஒரு உடல் புதைக்கப்பட இடத்தின் மேலே, சில மாதங்களிலேயே மற்றோரு உடலை புதைக்கப்படும் நிலை, இடப்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது. மேலும் பனந்தோப்பு, கருமாயிவட்டம் போன்ற தம்மம்பட்டியின் காட்டுக்கொட்டாய் பகுதிகளில் மயானங்களே இல்லை. அதுபோன்ற சூழலில், தம்மம்பட்டி ஊருக்குள், இறந்தவர் உடலை கொண்டு வருவது சிரமமாக உள்ளது. இதுபோன்ற சூழல், பல ஊர்களில் உள்ளது. அதனால் தம்மம்பட்டியில் மின்மயானம் அமைத்தால், பலருக்கு உதவியாக இருக்கும். நிலுவையில் இருக்கும்,மின்மயானம் குறித்த அனுமதியையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் தமிழக அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும் என்றனர்.
 

Tags : salem
ADVERTISEMENT
ADVERTISEMENT