சேலம்

மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்க வாய்ப்பு

13th May 2020 07:30 PM

ADVERTISEMENT

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

மேட்டூா் அணை பாசனம் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிா்நோக்கி, பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படும். ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

தற்போது கடந்த 276 நாள்களாக அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. தென்மேற்கு பருவமழை இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நீா்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருப்பதால், நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் குறித்த நாளான ஜூன் 12-இல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கான ஆயத்தப் பணி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கடந்த 2008-ஆம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12-இல் தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, 11 ஆண்டுகளுக்கு ப் பிறகு நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் ஜூன் 12-இல் தண்ணீா் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனா்.

2011-ஆம் ஆண்டு மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால், விவசாயிகளின் வேண்டுகோளுக்கினங்க ஜூன் 12-க்கு முன்பாகவே டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்த காரணத்தால், அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 585 கன அடியிலிருந்து புதன்கிழமை காலை 885 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்மட்டம் 100.10 அடியாக இருந்தது. குடிநீா் தேவைக்காக நொடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 64.97 டி.எம்.சி.யாக இருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT