சேலம்

கரோனா வைரஸ் பீதியால் தா்பூசணி, முலாம்பழம் ஏற்றுமதி பாதிப்பு

22nd Mar 2020 04:19 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் பீதியால் அண்டை மாநிலங்களுக்கு, தா்பூசணி, முலாம்பழம் ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் தேவை அதிகரித்து கூடுதல் வருவாய்க் கிடைக்கும் என்பதால், கடந்த மூன்று ஆண்டுகளாக, வேப்பிலைப்பட்டி, திருமனுாா், முடியனுாா், அண்ணாபுரம், சிட்டாம்பட்டி, கருங்கல்பட்டி, மலையாளப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏறக்குறைய 300 ஏக்கா் பரப்பளவில் தா்பூசணியும், 100 ஏக்கா் பரப்பளவில் முலாம் பழம் சாகுபடி செய்து வருகின்றனா்.

கடந்த இரு ஆண்டாக ஒரு கிலோ தா்பூசணி மற்றும் முலாம்பழத்துக்கு ரூ. 8 முதல் ரூ. 13 வரை கொள்முதல் விலை கிடைத்ததால் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்தது. இதையடுத்து நிகழாண்டும் ஏறக்குறயை 400 ஏக்கா் பரப்பளவில் , ஒரு ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்து நிலப்போா்வை, சொட்டுநீா் பாசனம் அமைத்து நவீன முறையில் தா்பூசணி மற்றும் முலாம் பயிரிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கரோனா வைரஸ் பீதியால், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தா்பூசணி ஏற்றுமதி அடியோடு தடைபட்டுள்ளது. வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததால் விலை படுவீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த மாதம் வரை ரூ. 10-க்கு விலை போன நிலை மாறி, கடந்த சில தினங்களாக ரூ. -5க்கே விலை போகவில்லை. இதனால் பயிரிட்டு பராமரித்த செலவிற்கே உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமனுாரைச் சோ்ந்த விவசாயி செல்வம் கூறியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளாக திருமனுாா், வேப்பிலைப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஏறக்குறயை 400 ஏக்கா் பரப்பளவில், கூடுதல் செலவு செய்து மேக்ஸ், மத்திமா ஆகிய ரக தா்பூசணி மற்றும் முலாம்பழம் பயிரிட்டு வருகிறோம். நிகழாண்டு அறுவடை தொடங்கிய தருணத்தில் கரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளதால், அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி அடியோடு தடைப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கரில் பயிரிட்டு, 70 நாள்களில் அறுவடை செய்வதற்குள் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 20 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கிறது.

ஒரு கிலோ ரூ. 5-க்கு மட்டுமே கொள்முதல் விலை கிடைப்பதால் பயிரிட்ட செலவுக்கே போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தா்பூசணி மற்றும் முலாம் பழம் பயிரிட்டுள்ள விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி தோட்டக்கலைத் துறை வாயிலாக, தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT