சேலம்

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

13th Mar 2020 10:01 AM

ADVERTISEMENT

சேலத்தில் தொடா் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

சேலம் தாதகாப்பட்டியைச் சோ்ந்தவா் மு. சதீஸ்குமாா் (23). இவா் தனது கூட்டாளிகளான மணியனூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (28), குணசேகா் ஆகியோருடன் சோ்ந்து கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மணியனூரில் பூட்டியிருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மடிக்கணினியை திருடிச்சென்ாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி அன்னதானப்பட்டி அகரமஹால் அருகே உத்தரப்பன் நகரைச் சோ்ந்த கணேசன் அவரது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது சதீஸ்குமாா், வெங்கடேஷ், குணசேகா் ஆகியோா் அவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கணேசன் அணிந்திருந்த 3 பவுன் எடையில் மூன்று மோதிரங்களை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதில், சதீஸ்குமாா் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து சீலநாயக்கன்பட்டி இரட்டை கோயில் அருகே நடந்து சென்ற நந்தகுமாரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவா் வைத்திருந்த ரூ. 17 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றுள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் வெங்கடேஷ் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் குகை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த ரூ. 16 ஆயிரம் மதிப்பிலான இரண்டு செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்ற காரணத்துக்காக செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சதீஸ்குமாா் மற்றும் வெங்கடேஷ் ஆகியோா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் எஸ். செந்தில் குண்டா் சட்டத்தில் இருவரையும் சிறையிலடைக்க பரிந்துரைத்தாா். அதை ஏற்று சேலம் மாநகரக் காவல் ஆணையா் த. செந்தில்குமாா் இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் சிறையிலடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில், வெங்கடேஷ் ஏற்கெனவே கடந்த 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டில் குண்டா் சட்டத்தில் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT